இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இம்மாதம் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐ, அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது ராகுல் டிராவிட்டோடு பிசிசிஐ தலைவர் கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பு ஏற்கச் சம்மதம் தெரிவித்ததாகவும், தற்போது நடைபெற்றுவரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குப் பின்னர், இந்தியாவில் நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் அவர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் எனவும் தகவல் வெளியானது.
ஆனால் ஒரு தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிசிசிஐ தலைவர் கங்குலி, "சீனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க விரும்புகிறாரா என்பது குறித்து நாங்கள் முன்பே அவருடன் ஆலோசனை நடத்தினோம். ஆனால் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அவருடைய நிலைப்பாடு இப்போதும் அதேதான். அவர் சிறிது கால அவகாசம் கேட்டுள்ளார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளான இன்று, ராகுல் டிராவிட் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டிராவிட் தற்போது விண்ணப்பித்துள்ளது சம்பிரதாயமானது எனத் தெரிவித்துள்ள அந்த அதிகாரி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக இருப்பவர்களும், இந்திய அணியில் அதே பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.