உலகக் கோப்பை லீக் போட்டிகள் 75% முடிந்த நிலையில், எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரோஹித், கோலி, வார்னர் என தொடக்க ஆட்டக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகக் கோப்பையாக மாறி வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பையில் தொடர்ந்து நன்றாக ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன், தொடக்க ஆட்டக்காரரான டி காக் நியூசிலாந்து அணி உடனான போட்டியிலும் சதம் அடித்துள்ளார். முடிய இன்னும் இந்த சதத்தின் மூலம் இந்த உலகக் கோப்பையில் தனது 4ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்த உலகக்கோப்பையில் 22 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒரு உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த உலக கோப்பையில் இதுவரை 545 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்கிற குமார் சங்ககாராவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார். அத்தோடு ஒரு தென்னாப்பிரிக்க வீரராகவும் ஒரு உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை எட்டிப் பிடித்த நிலையில், இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் டி காக் மேலும் பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி உலக கோப்பைகளில் இதுவரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில், இந்த முறையாவது தகுதி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சிறப்பாக ஆடிவரும் டி காக் இந்த முறை அணியை நிச்சயம் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வார் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடையே மிகுந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் டிகாக் இந்த உலக கோப்பையோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் டி காக் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வெ.அருண்குமார்