Skip to main content

ஷமியை கட்டி அணைத்த பிரதமர்! - வீடியோ வைரல்! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Prime Minister Narendra Modi met Indian players in dressing room video

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

போட்டி முடிந்து இந்திய அணி வீரர்கள் தங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தபோது, பிரதமர் மோடி அவர்களை அங்கு சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி, “10 போட்டிகளில் தொடர்ந்து நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த தோல்வி சாதாரணமானது, இதுபோல் நடக்கும். ஒட்டுமொத்த நாடும் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது சிரியுங்கள்” என்று தெரிவித்தார். 

 

மேலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கட்டி அணைத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்து, “இந்தத் தொடரில் நீங்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினீர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

 

தொடர்ந்து பிரதமர் மோடி, “நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தீர்கள். அனைவரும் இணைந்து இருந்து ஒருவரையொருவர் உத்வேகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் டெல்லி வரும்போது உங்களை மீண்டும் நான் சந்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.