ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்சில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதித்தது. நீரஜ் சோப்ரா தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்றார். பி.வி சிந்து, தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். லோவ்லினா ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது.
அதேபோல் மீராபாய் சானு பளு தூக்குதலில் வெள்ளி பதக்கத்தினையும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர். இன்னொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறி ரசிகர்களின் இதயங்களை வென்றது.
இந்தநிலையில் இந்திய ஒலிம்பிக் குழுவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார். அப்போது பேசிய அவர், "டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களை வாழ்த்த விரும்புகிறேன். இந்த அணி, ஒலிம்பிக் வரலாற்றில் நாட்டிற்காக அதிக பதக்கங்களை வென்றுள்ளது. உங்கள் சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. குறிப்பாக, பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் உலகத்தரம் வாய்ந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய நமது மகள்கள் குறித்து நாம் பெருமைப்படுகிறோம். கரோனாவிற்கு மத்தியிலும் கொண்டாடுவதற்கு நீங்கள் எங்களுக்கு ஒரு காரணத்தை அளித்தீர்கள். ஒரு விளையாட்டில் பங்கேற்கும்போது சில நேரங்களில் வெற்றியடைவீர்கள். சில நேரங்களில் தோல்வியடைவீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வீர்கள்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குடியரசு தலைவர், "நீங்கள் வெற்றியை பணிவுடனும், தோல்வியை கண்ணியத்துடனும் ஏற்றுக்கொண்டதில் நான் பெரிதும் மகிச்சியடைகிறேன். 130 கோடி இந்தியர்கள் உங்கள் வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், உற்சாகத்துடன் உங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன்" என கூறினார்.