Skip to main content

ஒலிம்பிக் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருது வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

dhyan chand khel ratna

 

இந்தியாவில் விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அண்மையில் தயான்சந்த் கேல் ரத்னா எனப் பெயர் மாற்றப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து அண்மையில், ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவி தஹியா, மகளிர் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் ஆகியோருக்கும், பாராஒலிம்பிக் போட்டிகளில், பேட்மிண்டனின் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்ற பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்டில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் இருவேறு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அவனி லேகாரா, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ் நர்வால் ஆகியோருக்கும் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

 

மேலும்  ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ், இந்தியக் கால்பந்தாட்ட நட்சத்திரம் சுனில் சேத்ரி, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோருக்கும் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

 

இந்தநிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று இந்த விருதுகளை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அளித்து சிறப்பித்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இந்திய ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதையும் குடியரசு தலைவர் வழங்கினார்.