பெங்களூர் அணியின் மிகப்பெரிய பலவீனமே அவர்களது பந்துவீச்சு தான் என இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் கெவின் பீட்டர்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
13 -ஆவது ஐ.பி.எல் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, துபாய் சர்வதேச மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரப் பயிற்சியில் உள்ளனர். பெங்களூர் அணி, இந்தாண்டு கோப்பையைக் கைப்பற்றி தன் மீது வைக்கப்படும் அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூடுதல் முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் கெவின் பீட்டர்சன், பெங்களூர் அணியின் பலவீனம் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் அவர், "எத்தனை ஐ.பி.எல் தொடர்களாக நான், வீரர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இருக்கும் கேள்வியெல்லாம் பெங்களூர் அணியால் வெல்ல முடியுமா? என்பது தான். அவர்களிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சமகாலத்து அதிரடி வீரர்களும் உள்ளனர். அவர்களது பலவீனமே பந்துவீச்சு தான். கடந்த ஆண்டு தொடர்ச்சியான சில தோல்விகளைச் சந்தித்த போது, வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் வருகை அவர்களுக்குச் சில வெற்றியைத் தந்தது. ஆடம் ஷாம்பா, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோரிடமிருந்து விராட் கோலி சிறந்த பங்களிப்பை எதிர்பார்ப்பார். அது சரியாக அமையும் பட்சத்தில் அவர்களது பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாக அமையும்" எனக் கூறினார்.