பாரா ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் என்பவர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் பாரா ஆசியப் போட்டியில் நீளம் தாண்டுதல் டி.64ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் என்பவர் இந்தியாவுக்கு விளையாடினார். இந்தப் போட்டியில் அவர் 6.80 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை அடைந்தார். இதன் மூலம் நீளம் தாண்டுதல் டி64-ல் தர்மராஜ் சோலைராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில், இலங்கை வீரர் மத்தக கமாகே 6.68 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தையும், ஜப்பான் வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.
ஆசிய மற்றும் பாரா விளையாட்டு போட்டியில் டி.64 பிரிவில் தற்போது தர்மராஜ் சோலைராஜ் பெற்றிருக்கும் 6.80 என்பதே சாதனையாக உள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி எனும் பேட்மிட்டன் வீரர் மகளில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வில்வித்தை போட்டியில் ஷீதல் தேவி எனும் வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். பாரா ஆசியப் போட்டியில் வில்வித்தையில் பெண் வீரர் இரு தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.