பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூன் 26 ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 9 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 8 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பிரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. 3 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 43வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா சார்பாக மனு பாகர் - சரப்ஜோத் சிங், துருக்கி சார்பாக தர்ஹான் - யூசுப் டிகெக், தென் கொரியா சார்பாக லீ வான்ஹோ - ஒ யே-ஜின்னை ஜோடிகள் பங்கேற்று இருந்தனர். வெண்கலப் பதக்கத்திற்காக இந்தியா மற்றும் தென் கொரியா இடையே நடந்த போட்டியில், 16 புள்ளிகளுடன் கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் துருக்கியும், செர்பியாவும் மோதிய நிலையில், 16 புள்ளிகள் பெற்று துருக்கியை வீழ்த்தி, செர்பியா தங்கப் பதக்கம் வென்றது. 14 புள்ளிகளுடன் துருக்கி வெள்ளிப் பதக்கம் வென்றது.
செர்பியா தங்கம் பெற்றிருந்தாலும், இந்த போட்டியின்போது துருக்கி வீரர் 51 வயதான யூசுப் டிகேக்கின் உடல்மொழி பலரையும் கவர்ந்துள்ளது. பொதுவாகத் துப்பாக்கி சுடும் வீரர்கள் பாதுகாப்பிற்காகக் கண் மறைவு கண்ணாடி, அதிக சத்தத்தை உணராமல் இருக்க இயர் பட்ஸ் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்திக்கொண்டு போட்டியில் பங்கேற்பார்கள். ஆனால் சாதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடி மற்றும் சிறிய அளவிலான இயர் பட்ஸ் மட்டுமே பயன்படுத்தி யூசுப் டிகேக் சினிமாவில் வரும் ஹீரோக்களை போல, ஸ்டைலாக துப்பாக்கியை எடுத்து இலக்கை நோக்கிச் சுட்டார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.