இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஒல்லி ராபின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமானதோடு, சிறப்பாகவும் பந்து வீசினார். அதேநேரத்தில், அவர் கடந்த 2012-13 ஆண்டுகளில் பதிவிட்டிருந்த இனவெறியைத் தூண்டும் வகையிலான ட்வீட்களும், பாலியல் ரீதியான ட்வீட்களும் வெளிச்சத்திற்கு வந்தன.
இது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து தனது ட்வீட்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், "எனது செயல்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன். அந்த நேரத்தில் எனது மனநிலை எப்படி இருந்திருந்தாலும், எனது செயல்கள் மன்னிக்க முடியாதவை. அந்தக் காலக்கட்டத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்துள்ளேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன்" என தெரிவித்தார்.
இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், அவரது ட்வீட்கள் தொடர்பாக ஒழுங்கு விசாரணையையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்திவருகிறது.