உலக கோப்பையின் 16 வது லீக் ஆட்டம் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கான்வே 18 ரன்களுக்கு முஜீப் பந்தில் அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யங், ரச்சின் இணை பொறுப்புடன் ஆடியது. ரச்சின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, யங் அரை சதம் கடந்து 58 ரன்களுக்கு வீழ்ந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்ப, 110/4 என்று தடுமாறியது. அடுத்து வந்த கேப்டன் லாதம், பிலிப்ஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. கேப்டனுக்கு உரிய பொறுப்புடன் ஆடிய லாதம் அரை சதம் கடந்தார். பிலிப்சும் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த பிலிப்ஸ் 71 ரன்களிலும், லாதம் 68 ரன்களிலும் நவீன் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாப்மேனின் கடைசிக் கட்ட அதிரடியான 25 ரன்கள் உதவியுடன், நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன், அஸ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ரஷித், முஜீப் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 11, ஜத்ரன் 14 என அடுத்தடுத்து அவுட் ஆக, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சான்ட்னர் சுழல் மற்றும் பெர்குசன் வேகம் என இருமுனை தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக் கட்டு போல் சரிந்தனர். அதிகபட்சமாக ரஹ்மத் 36 ரன்கள் மற்றும் ஒமர்சாய் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் நியூசி பந்து வீச்சில் நிலை குலைந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 149 ரன்கள் வித்தியாத்தில் படுதோல்வி அடைந்தது. நியூசி தரப்பில் சான்ட்னர், பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், ரச்சின், ஹென்றி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது நியூசிலாந்து அணி வீரர் பிலிப்சுக்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது. சேப்பாக்கம் மைதானம் சேசிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து முதலில் பந்து வீச தீர்மானித்தது தவறான முடிவாகிவிட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் அதிக அனுபவம் பெற்ற சான்ட்னரை கணக்கில் கொள்ளாமல் முதலில் பந்து வீசியதும், தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், சேப்பாக்கம் ஆடுகளத்தில் காற்றில் பந்தை திருப்ப வேண்டும். சான்ட்னர் கடைபிடித்த அந்த அணுகுமுறையை, ஆப்கன் வீரர்கள் செய்ய தவறி விட்டனர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணி பெற்றுள்ள இந்த அபார வெற்றியின் மூலம், ரன் விகிதம் உயர்ந்து, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- வெ.அருண்குமார்