மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன்.
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவிலிருந்து தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த நிகத் ஜரீன் கலந்துகொண்டார். 52 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு தொடக்கச் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி வாகை சூடிய இவர், நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரை இறுதியில் போட்டியிட்டார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இவர் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் பெண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை எதிர்கொண்ட நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினர். 25 வயதான நிகாத் ஜரீன் கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.