Skip to main content

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்?

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

New captain for Indian cricket team?

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை நவம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. உலக கோப்பை முடிந்தவுடன் தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

 

உலக கோப்பைக்கு முன்னர் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், அந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். இனி டி20 தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பந்தை தடுக்க முயன்ற போது ஹர்திக் பாண்டியாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலே வெளியேறினார். தொடர்ந்து காயம் குணமாகாத நிலையில், தொடரில் இருந்தே வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில், உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், காயம் குணமாக இன்னும் இரண்டு மாத காலம் தேவைப்படுவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் டி20 அணிக்கு யார் கேப்டனாக செயல்படப் போகிறார் என  எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், துணை கேப்டனாக இருந்த சூர்யகுமார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்