Skip to main content

மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

 Mohammad Siraj is the number 1 bowler in the world!

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை 2023 இன் இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனால், ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 

 

ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை கடந்த ஞாயிறு விளையாடியது. இதில் இந்தியா, இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முகமது சிராஜ் 2023 ஜனவரியில் ஐசிசி பட்டியலில் முதலிடம் வகித்திருந்தார். ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மார்ச் மாதத்தில் சிராஜை முந்தி முதலிடத்தைக் கைப்பற்றினார். பின்னர், சிராஜ் ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

 

இந்நிலையில்தான் சிராஜ் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் சிராஜ் 8 இடங்கள் முன்னேறி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், " மீண்டும் ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த, சிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்" என போஸ்டருடன் பதிவிட்டது.

 

முகமது சிராஜ் ஐசிசி பட்டியலில் முன்னேறி ஜோஷ் ஹேசில்வுட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார். மறுபுறம். இந்திய ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் மூன்றாம் இடத்தில் இருந்து 9ம் இடத்திற்கு சரிந்துள்ளார். ஆனால், இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜாஸ்பிர்த் பும்ரா இரண்டு இடங்கள் முன்னேறி 27வது இடம் பிடித்துள்ளார்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முதன்முறையாக இடம் பிடித்த தமிழ்நாட்டு வீரர்; வெவ்வேறு கேப்டன்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

First Tamil Nadu player to place; Indian team announcement with different captains!

 

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகளுக்குமான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா மறுபடியும் டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவாரா என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், சூரியகுமார் யாதவே மீண்டும் டி20 அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறிது ஓய்வு தேவைப்படுவதாக தெரிவித்ததால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ராவுக்கும் டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்த தென்னாப்பிரிக்கா தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன், ரஜத் பட்டிதர் மீண்டும் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சாய் சுதர்ஷன் முதன்முறையாக இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஷமி காயத்தைப் பொறுத்து இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய டி20 அணி:

 

ஜெய்ஸ்வால், கில், ருத்ராஜ், திலக் வர்மா, சூரியகுமார்(C) ரிங்கு சிங், ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்(WK), ஜித்தேஷ் சர்மா (WK), ரவீந்திர ஜடேஜா(VC), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சகர்.

 

இந்திய ஒரு நாள் அணி:

 

ருதுராஜ், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் பட்டிதர், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ், கே எல் ராகுல்(C), சஞ்சு சாம்சன்(WK), அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், முகேஷ் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், தீபக் சகர்

 

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் (C)  கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ், ருதுராஜ், இஷான் கிஷன்(WK) கே எல் ராகுல்(WK) ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா (VC) பிரசித் கிருஷ்ணா

 

இதில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ், ஸ்ரேயாஸ் மூன்று விதமான அணியிலும் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் முகேஷ் குமார் மூன்று விதமான அணிகளிலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- வெ.அருண்குமார் 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிரட்டிய மேக்ஸ்வெல்! மெர்சல் ஆன இந்திய பவுலர்கள்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான மூன்றாவது டி20 கவுகாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 24/2 என்ற நிலையில் கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார். ருதுராஜ் ஒரு முனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் சூரியகுமார் வழக்கம்போல தனது அதிரடியை காட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்காமல், கேப்டன் சூர்யகுமார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

தொடர்ந்து திலக் வர்மா ருதுராஜ் இணை ஆரம்பத்தில் சற்று பொறுமையாக ஆடியது. பின்னர் தனது அதிரடி துவங்கிய ருத்ராஜ் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் ருத்ர தாண்டவம் ஆடினார். திலக் வர்மா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ருதுராஜ் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் முதல் டி20 சதமாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்தார். மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில்  ஒருவரான ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஆவேசமாக ஆடத் தொடங்கினார். ஆவேஸ் கான், ஹெட்டை 35 ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த இங்கிலீஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இணை ஓரளவு நிலைத்து ஆட, ஸ்டாய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். பின்னர் இணைந்த வேட், மேக்ஸ்வெல் இணை சிறப்பாக ஆடியது. பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தும் பயனளிக்கவில்லை. 47 பந்துகளில் சதம் கடந்த மேக்ஸ்வெல், ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து வெற்றி தேடித் தந்தார். 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வேட் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

- வெ.அருண்குமார்  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்