ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.
தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும்.
இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.
உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.
ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.