Skip to main content

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் - பதக்க மழையில் நனையும் இந்தியா!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021
jk

 

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. தேவேந்திரா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் வட்டு எறிதல் போட்டியில் யோகேஸ் கதுன்யா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 44.38 மீட்டர் வட்டு ஏறிந்து பதக்கத்தை தன்வசப்படுத்தினார். பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்த வீரர்கள் பதக்கங்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு; தமிழ்நாடு அணி அசத்தல்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Tamilnadu team achievement on khelo gallo India Tournament

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஹரியானா மாநிலத்திலும், கடந்த 2022ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில்,கடந்த 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் இன்று (31-01-24) வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை கடந்த 19ஆம் தேதி மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023இல் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்த கேலோ இந்தியா போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றோடு நிறைவு பெற்றன. 

இந்த போட்டியில், 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஹரியானா மாநிலம், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 8ஆம் இடத்தை பெற்ற நிலையில், இந்தாண்டு 2ஆம் இடத்தை பெற்று தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. 

இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 26 போட்டிகள் இடம்பெற்றுள்ளது. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்களை பெற, சுமார் 6,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Announcement of Pongal medals for the police

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு காவல் துறையில் பாணியாற்றும் காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 119 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் நிலைகளில் 59 பேர்களுக்கும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு பதவி நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 ரூபாய் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இப்பதக்கங்கள் பெறும் 3184 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.