கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறியதால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்சர் நீக்கப்பட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டிருந்த சூழலில், தற்போது சில நாடுகளில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் நடைபெறத் துவங்கியுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும், பாதுகாப்பு விதிமுறைகளோடும் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடரில், கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறியதால் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்சர் நீக்கப்பட்டுள்ளதோடு, அவர் ஐந்து நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ள அவர், "நான் செய்ததற்காக மிகவும் வருந்துகிறேன். நான் மட்டுமல்லாமல் முழு அணியையும் ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டேன். எனது செயல்களுக்கான முழு விளைவுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாதது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. இரு அணிகளுக்கும் நான் ஆபத்தை ஏற்படுத்திவிட்டேன். இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.