சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி, இந்த ஆண்டு பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராக மட்டுமே களமிறங்க உள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, கடந்த சில ஆண்டுகளாக ஆல்-ரவுண்டராக சிறப்பாகச் செயலாற்றி சென்னை அணிக்கு பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத்தந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் சென்னை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அணிக்காக நான்கு முறை ஐபிஎல் பட்டத்தை வென்று கொடுத்ததோடு, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக வெற்றி சதவீதத்தை (64.83%) பதிவு செய்த அணியாக சென்னை திகழவும் முக்கிய காரணமாக இருந்தவர் தோனி. சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகிய சூழலில், ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணியின் கேப்டனாக செயலாற்றி வந்தார். இந்நிலையில், அந்த பொறுப்பிலிருந்தும் விலகியுள்ள அவர், தனது பொறுப்பினை ஜடேஜாவிடம் வழங்கியுள்ளார்.