ஐபிஎல் 2024 ஏழாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 3.1 ஓவர்களில் 29-1 என்று ஆடி வருகிறது.