Skip to main content

வங்கதேசத்திடம்  இந்திய அணி தோல்வி!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Indian team lost to Bangladesh!

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் சம்பிரதாயமாக நடந்த இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது என  நினைத்த ரசிகர்களை, நேற்றைய வங்கதேச அணியின் ஆட்டம் இருக்கை நுனியில் அமர வைத்தது. 

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். வங்கதேச அணி சார்பில் தொடக்கத்தில் தன்சித் ஹசன்-லிட்டன் தாஸ் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்திலே வங்கதேச அணி தனது முதல் விக்கெட்டை இழந்து தடுமாறத் தொடங்கியது. ஆம், 5.4 ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில், லிட்டன் தாஸ் டக் அவுட் ஆக, தன்சித் 13 ரன்களும், அனமுள் ஹேக் 4 ரன்கள் என வெளியேறினர். இப்படி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணியை மீட்டெடுக்க அணியின் கேப்டன் சகிப் களமிறங்கினார். சகிப் மற்றும் மேஹிடி ஹசன் கூட்டணி அமைத்து ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆனாலும், ஒரு கட்டத்தில் மேஹிடியால் சகிப்பிற்கு ஈடு கொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் அவர் 13.6 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய அணியின் அதிரடி வீரர் தௌஹிட் ஹ்ரிடாய் சிறப்பாக விளையாட வங்கதேசம் சரிவில் இருந்து மீண்டது. ஒரு புறம் சகிப் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விலாச, தௌஹிட் நிதானமாக துணை நின்று விளையாடினார். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை சேர்த்து அசத்தியது. 

 

சிறப்பாக விளையாடிய சகிப் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கையில், 80 ரன்கள் எடுத்து சர்துல் தாக்குரின் வேகப் பந்தில் கிளீன் பவுல்ட் ஆனார். இவர், 6 பவுண்டரிகள், 3 சிச்கர் என விளாசினார். பின்னர், களமிறங்கிய ஷமீம் ஹோசைன் 1 ரன்கள் எடுத்து வெளியேறியதால் வங்கதேசம் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அடுத்து விளையாட வந்த நசும் அஹ்மத் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை தரும் வகையில் விளையாடினார்.

 

200 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த வங்கதேசம் அணி திடீரென ஹ்ரிதாய் விக்கெட்டை இழந்தது. நிதானமான ஆடிய அவர், 54 ரன்கள் சேர்த்தார். இப்படி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேற வங்கதேசம் 193 ரன்களுக்கு 7 வீரர்களை இழந்து நின்றது. இருந்தும் நசும் அஹ்மத் இறுதியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார், பின்னர், மஹேடி அசன், தன்சீம் இருவரும் இறுதி வரை களத்தில் நின்று 9 ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில், ஷர்துல் தாக்கூர்,முகமது சமி தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

 

266 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் ரோகித் சர்மா-சுப்மன் கூட்டணி இறங்கியது. இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தின் 2வது பந்திலே டக் அவுட் ஆகினார். பின்னர், தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வந்தார் திலக் வர்மா. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார். அடுத்து 3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களம் கண்டார். இவர் சுப்மன் கில்லுடன் இணைந்து கூட்டணி அமைக்க இந்திய அணியின் ரன்கள் சற்று கூடியது. இதனால், இந்த இருவர் கூட்டணி 50 ரன்களை எடுத்தது. நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கிய நிலையில் ராகுல் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடி வீரர் இஷான் கிஷன் களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 94 ரன்களுக்கே 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இப்படி தொடர்ந்து இந்திய வீரர்கள் அவுட் ஆகி சென்றாலும் சுப்மன் மறுபுறம் அற்புதமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி சற்று நம்பிக்கை அளித்தார். பின் அவரும் 26 ரன்களில் சகிப் பந்தில் பவுல்ட் ஆனார்.  


இவரைத் தொடர்ந்து ஜடேஜா கலம்கண்டு 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், சுப்மன் கில் மட்டும் வங்கதேச பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவர், 133 பந்துகளில் 121 ரன்களை குவித்தார். அதில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். பின்னர், அவரும் 43.4 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இருந்தும் அக்சர் படேல் களத்தில் இருந்தது நம்பிக்கை அளித்தது. ஆனால், அவருடன் விளையாடிய சர்துல் தாகூர் 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர், முகமது சமி களமிறங்கினார். அக்சர் படேல் தன்னால் முடிந்த வரை போராடி 42 ரன்கள் சேர்த்தார் அவுட் ஆக வெற்றி வாய்ப்பு இந்திய அணியிடம் இருந்து நழுவியது. 

 

முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் சேர்த்தது. இதனால், வங்க தேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச பவுலிங்கில் ,முஸ்டபிசூர் 3 விக்கெட்டுகளையும், தன்சிம், மஹேடி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும், சகிப்பும், மேஹிடி ஹசனும் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை சகிப் ஹல் ஹசன் பெற்று கொண்டார். நாளை (17-09-2023), இந்தியா-இலங்கை ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும்.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கேப்டனாக ஷைன் ஆன சூர்யா! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Surya shines as captain! India won the series!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

 

பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

- வெ.அருண்குமார்  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்