Skip to main content

"மீண்டும் மனங்களை வென்றுவிட்டார்" - நடராஜனின் செயலால் நெகிழும் ரசிகர்கள்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

NATARAJAN

 

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணியும், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில், இரண்டாம் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. காயங்கள், இனவெறித் தாக்குதல் எனப் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்திய அணி பெற்ற இந்தச் சாதனை வெற்றியை இந்திய ரசிகர்கள் அப்போது சிறப்பாகக் கொண்டாடினார்கள். வெற்றியோடு ஊர் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஐந்து கோடி பரிசு அறிவித்தது. 

 

இந்தியத் தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், சுப்மான் கில், நடராஜன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆறு இளம் வீரர்களுக்கு காரை பரிசளிக்கப்போவதாக அறிவித்தார். மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான மஹிந்திரா தார் காரை, தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். 

 

ஆனந்த் மஹிந்திரா கூறியவாறே, இளம் வீரர்களுக்கு சமீபத்தில் கார் பரிசளிக்கப்பட்டது. இந்த நிலையில் நடராஜன் அந்த காரை, அவரது இந்திய அணி கனவு நிஜமாவதில் முக்கியப் பங்காற்றிய அவரது பயிற்சியாளரும், வழிகாட்டியுமான ஜெயப்ரகாஷ்க்கு பரிசளித்துள்ளார். இதனை ஜெயப்ரகாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடராஜன் மீண்டும் ஒருமுறை மனங்களை வென்றுவிட்டதாக ரசிகர்கள், அவரை புகழ்ந்து வருகின்றனர்.

 

 

Next Story

“அவர்களைப் பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்...” - ஹிட் பட பிரபலங்களுடன் ஆனந்த் மஹிந்த்ரா

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
anand mahindra about 12th fail movie

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 12த் ஃபெயில். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இக்கதை மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. பின்பு கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. அதன் பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இப்படத்தின் மூலம் பிரபலமான நிஜ தம்பதிகள் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ் உள்ளிட்டோரை சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் பெருமையுடன் வைத்திருக்கும் அவர்களின் ஆட்டோகிராஃப்களை, நான் அவர்களிடம் கேட்டபோது வெட்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். 

படத்தின் கதை அவர்களின் உண்மைக் கதையை தழுவியதாக அறிந்தேன். அவர்கள் நேர்மையான ஒருமைப்பாட்டு தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டுமானால், அதிகமான மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது வேகமாக நடக்கும். எனவே அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.