நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி போராடி வென்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 176 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்தியா - நியூசிலாந்து மோதும் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் சுப்மன் கில் 11 ரன்களிலும் இஷான் கிஷன் 19 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை விடுத்து பொறுமையாக ரன்களை சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 26 ரன்களை எடுத்தார்.