இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சாரம் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.
அதன் பின் வந்த இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. 337 என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டதுடன் இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் இந்த அணியில் இந்திய அணி இந்த ஆட்டத்தில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்திய அணியின் சாதனை துளிகள்:
நேற்றைய போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னெர்ஷிப் என்ற சாதனையை ராகுல், ரோஹித் ஜோடி படைத்துள்ளது.
தவான் காயத்தால் அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் விஜய் சங்கர், புவனேஸ்வர்குமார் பந்துவீசும்போது காயமடைந்ததால் உலகக்கோப்பையில் தனது முதல் பந்தை வீசும் வாய்ப்பை பெற்றார். அவர் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர், ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற சாதனையை விஜய் படைத்துள்ளார். உலகக்கோப்பை போட்டியில் இதற்கு முன்னதாக பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹார்வி ஆகியோரே இந்த சாதனையை படைத்திருந்தனர்.
நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் 140 ரன்கள் அடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோலி மற்றும் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் 2015 ல் கோலி 107 அடித்ததே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் நேற்று படைத்தார். இது வரை இந்திய அணிக்காக 355 சிக்ஸர்கள் அடித்து தோனி முதல் இடத்தில் இருந்தார். நேற்று 3 சிக்ஸர்கள் விளாசி 358 சிக்ஸர்களுடன் தோனி சாதனையை ரோஹித் முறியடித்தார்.
மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கடைசியாக 2018 ஆசிய கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய போது ரோஹித் 111 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சச்சின், டிராவிட், ரஹானே, கோலிக்கு பிறகு இந்திய அணிக்காக தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50+ ரன்கள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார்.
ரோஹித் ஒரு புறம் சாதனைகள் புரிய மறுபுறம் கோலியும் தனது பங்கிற்கு சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 57 ரன்கள் அடித்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் சச்சின், கங்குலிக்கு அடுத்து இந்த சாதனையை படைத்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுபோல இந்த சாதனையை வெறும் 222 இன்னிங்ஸ்களில் படைத்து அதிவேகமாக 11,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், இந்திய வீரர்களின் இந்த சாதனைகளும் இந்திய ரசிகர்களை வியக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.