இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று (11-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் தொடரவிருக்கிறது.
ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று (11-09-2023) கொழும்பு, பிரேம தாசா ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா-சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடத் தொடங்கியதால் அணியின் ரன்கள் உயரத் தொடங்கியது. மறுபக்கம் பாகிஸ்தானின் பவுலர்கள் பந்துவீச்சில் திணறிக் கொண்டிருந்தனர். விக்கெட் எதுவும் இழக்காமல் இந்திய அணி 100 ரன்களை எளிதாகக் கடந்தது. பின்னர், அரை சதம் அடித்த ரோகித் 56 ரன்களில் வெளியேற இந்தியாவின் முதல் விக்கெட் 121 ரன்னில் விழுந்தது.
தொடர்ந்து, விராத் கோலி களமிறங்கினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்லும், ரோகித்தைத் தொடர்ந்து 58 ரன்களில் வெளியேறினார். இந்தியாவின் ஸ்கோர் 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ஆக இருந்தபோது. மூன்றாவது விக்கெட்டுக்கு விளையாட வந்தார் கே.எல்.ராகுல். பின்னர், விராத்தும்-ராகுலும் கூட்டணி அமைத்து ஆடத் தொடங்கினர். ஆனால், சற்று நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மழை விடாமல் பெய்ததால் ஆட்டம் 24.1 ஓவரில் நிறுத்தப்பட்டது. விராத் கோலி 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். ஏற்கனவே, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆசிய கோப்பை 2023, இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் சூப்பர் 4 போட்டிக்கு பிரத்யேகமாக ரிசர்வ் டே அறிவித்திருந்தது. ஒரு வேளை மழை பெய்தாலும் அடுத்த நாள் ஆட்டத்தை தொடர அனுமதித்தது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. பாகிஸ்தான் சார்பில், சதாப் கான், அப்ரிடி தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
இதனால், இந்தியா இன்றைக்கு (11-09-2023) தொடர்ந்து பேட்டிங் செய்து 50 ஓவர் வரை விளையாடும். பின்னர், பாகிஸ்தான் இலக்கைத் துரத்தும். ஆனால், இன்றும் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்றைய ஆட்டமும் பாதிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையில், இன்றைய ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணி இலங்கையை, நாளை பிரேமதாசா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி 3.00 மணிக்கு தொடங்கும்.