உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் ஸ்டீவென் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடர் தடுமாற்றத்துடனே ஆடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 89 ரன்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்களையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.
தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. டேவிட் வார்னர் முகமது சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். உஸ்மான் கவாஜா 11 ரன்களிலும் மார்னஸ் லபுசானே 3 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை குறைவான ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினால் ஆட்டம் இந்தியாவின் வசம் மாறலாம்.