கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (14.07.2024) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஜிம்பாப்வே அணியின் சார்பில் முதல் ஓவரை கேப்டன் சிக்கந்தர் ராஷா வீசினார்.
இந்த பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து அசத்தினார். இருப்பினும் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டாக வீசப்பட்ட முதல் பந்தை மறுபடியும் எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே 12 ரன்களை அடித்த முதல் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்தார்.
இதனையடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தர் வென்றார்.