1990களின் மத்தியில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவின் கில் கிறிஸ்ட். ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவரது செயல்பாடுகள் என்பது அப்போதைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருந்ததாக சொல்லலாம். ஆனால், எப்போது தோனி ஃபேக்டர் என்ற ஒன்று அறிமுகமானதோ, அன்றைக்கே எல்லாமும் மாறிப்போனது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்ற இடத்தையும் தாண்டி, கேப்டன் என்ற பொறுப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வென்று காட்டியவர் அவர். இன்றும் கிரிக்கெட் ரசிக்கும், விளையாடும் இளம் தலைமுறை ‘தோனி மாதிரி ஆகணும்’ என்ற கனவோடு சுற்றித்திரிவதைக் காணமுடியும். இந்த தோனி ஃபீவர் பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனுமான சர்ஃபராஸ் கானையும் விட்டுவைக்கவில்லை.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் கான், ‘தோனி மூன்று ஃபார்மேட்டுகளிலும் தனது அணியை மிகச்சரியாக வழிநடத்திச் சென்றவர் என்பதால், அவரைக் காணும் யாராக இருந்தாலும் ஊக்கமடைவார்கள். நான் அவரை ஒரேயொரு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். 2017ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில் நான் அவரைக் கண்டு ஊக்கமடைந்தேன். என் வளர்ச்சியில் அவருக்கு முக்கியப்பங்கு உள்ளது’ என உற்சாகமாக பேசியுள்ளார்.