Skip to main content

டி-20 போட்டி; இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குப் பயங்கரவாதிகள் மிரட்டல்!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
 hreaten India-Pakistan match in t20 match

இந்தியாவில் சமீபத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில், கொல்கத்தா அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இந்த வருட கோப்பையை வென்றது. இதற்கிடையில், கிரிக்கெட் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கும் வகையில், ஜூன் மாதத்தில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவித்து வந்தனர்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜுன் 2ஆம் தேதி முதல் ஜுன் 29ஆம் தேதி வரை டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்று விளையாடவுள்ளன. 

டி-20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கிரிக்கெட் வீரர்களை கடந்த ஏப்ரல் மாதம் பிசிசிஐ அறிவித்தது. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), துபே, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

20 அணிகள் கலந்துகொள்ளும் டி-20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதவிருக்கிறது. இதனையடுத்து, இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் மோதவிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மைதானத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஐஎஸ் ஆதரவு அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.