இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் அறிமுக வீரராக ராஜத் பட்டிதார் களம் இறங்கினார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். ரோஹித் 14 ரன்களை எடுத்து நடையைக் கட்ட, கில் 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷ்ரேயாஸ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரரான ராஜத் பட்டிதார் 32 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் தனது இரண்டாவது சதத்தை சிக்சர் அடித்து பூர்த்தி செய்தார். அக்சர் 27, ஶ்ரீகா் பரத் 17 என்று ஆட்டமிழந்தாலும் மறுபுறம் ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 336/6 என்று இருந்தது. ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் இச்சாதனையை செய்யும் 3 ஆவது வீரரானார். முதலில் வினோத் காம்ப்ளி 21 வயது 32 நாள்களிலும், கவாஸ்கர் 21 வயது 283 நாள்களிலும் செய்துள்ளனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பஷிர், அகமத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடத் துவங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் 21, சொதப்பினாலும் கிராவ்லி அரைசதம் கடந்து ஓரளவு சிறப்பாக ஆடி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரூட் 5 பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பைப் பறித்த ஒல்லி போப் 23 ரன்களில் பும்ராவின் துல்லியமான யார்க்கரால் க்ளீன் போல்டு ஆனார். பேர்ஸ்டோ 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபோக்ஸ் 6 ரன்களில் நடையைக் கட்டினார். இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 172-6 என்று ஆடி வருகிறது. ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 14 ரன்களுடனும், அஹ்மத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆடி வருகின்றனர்.
- வெ.அருண்குமார்