தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் வருகையானது பெங்களூர் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கும் என கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் இத்தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் கடந்த இரண்டு தொடர்களில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. தற்போது அவர் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் உள்ளார். கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர், கிறிஸ் மோரிஸ் வருகை குறித்தும், பெங்களூர் அணி குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "கிறிஸ் மோரிஸ் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கூட அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். பெங்களூர் அணியை சீராக நிலைப்படுத்த அவரது பங்களிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். நான்கு ஓவர் பந்துவீசுவது மட்டுமின்றி, போட்டியின் இறுதி கட்டத்தில் விளையாட சிறந்த பின்வரிசை வீரராக அவர் இருப்பார். பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இம்முறை அமீரக மைதானங்களில் விளையாடுவதால் பந்து வீச்சாளருக்கும் சாதகமாக இருக்கும். விக்கெட் எடுப்பதற்கு சிரமமான சின்னச்சாமி மைதானங்களில் இந்தாண்டு விளையாடாதது அவர்களது பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பலம். அதனால் இம்முறை நவ்தீப் சைனி மற்றும் உமேஷ் யாதவிடம் இருந்து சிறந்த பங்களிப்பை எதிர்பார்க்கலாம்" எனக் கூறினார்.