இந்தியாவின் முன்வரிசை ஆட்டக்காரராக பல ஆண்டுகள் விளையாடி, நெருக்கடியான நேரங்களில் இந்தியாவின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் கவுதம் கம்பிர். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டூடே பத்திரிகைக்குக் கம்பீர் அளித்தப் பேட்டியில் 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சி.பி சீரீஸ் தொடரில் சச்சின், ஷேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரைச் சுழற்சி அடிப்படையில் பயன்படுத்திய தோனியின் முடிவை கடுமையாக சாடியுள்ளார். இது பற்றி அவர் கூறியது, '2015-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைகாக அந்த முடிவை எடுத்ததாக தோனி தெரிவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், வயது ஒரு விஷயமே இல்லை. தொடர்ந்து ரன் எடுக்கும் திறன் இருந்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்.
ஆனால், அன்று எங்கள் மூவராலும் இணைந்து விளையாடமுடியவில்லை. அப்படிருக்கு ஒரு இக்கட்டான நிலையில் எங்கள் மூவரையும் ஒன்றாகக் களமிறக்கினார் தோனி. அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய ஒரு போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நான் மூன்றாவது வீரராகவும் களமிறக்கப்பட்டேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றோம். தொடரின் தொடக்கத்தில் எங்களை இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஒரு இக்கட்டான நேரத்தில் மூவரையும் களமிறக்கினார். ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாகயிருக்க வேண்டும். ஆனால், தோனியால் அதையும் செய்ய முடியவில்லை. தனது முடிவை அந்தத் தொடரிலே மாற்றினார்' என கூறினார். மேலும் தான் விளையாடிய கேப்டன்களில் கும்ப்ளே தான் சிறந்தவர் என கூறினார்.