Skip to main content

தோல்வியறியா போராட்ட  வீரன்..."நெவர் கிவ் அப்"பின் அர்த்தம் யுவராஜ்...

yuvraj singh

 

''இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் ,எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன எவனாலயும் எங்கேயும் எப்போதும் தோற்கடிக்க முடியாது'', திரையில் தல அஜித் பேசிய வரிகளுக்கு நிஜத்தில் ஒருவரை உதாரணமாக காட்டவேண்டுமென்றால் சற்றும் யோசிக்காமல் யுவராஜ் சிங்கை காட்டலாம். அந்தளவிற்கு போராட்டங்களை கடந்து வென்றவர் யுவி. "யுவி அவரது உச்சகட்ட பார்மில் இருந்தபோது அவருக்கு பந்து வீச எங்களின் பந்துவீச்சாளர்கள் பலர் பயந்தார்கள்" இப்படி சொன்னது இலங்கை அணி கேப்டன் சங்ககரா. அந்தளவிற்கு பந்துவீச்சளர்கள் மனதில் பயத்தை விதைத்திருந்தார் யுவி.

 

யுவிக்கு சிக்ஸர் விளாசுவது ஒரு பொழுதுபோக்குதான் ஹை-பேக்லிப்ட் வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட பந்தையும் அசால்ட்டாக பௌண்டரி லைனுக்கு அனுப்பி வைப்பார். அவர் பந்தை பலத்தை கொண்டு அடிக்கவேண்டியதில்லை, பேட்டை சாதாரணமாக சுழற்றினால் போதும் பந்து ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் கையில் போய் விழும். ஆங்கிலத்தில் பேட் ஸ்விங் என்பார்கள். அதாவது பந்தை நோக்கி பேட்டை வீசுவது. அதை மிக அழகாக செய்பவர் யுவி. யுவி இந்தியாவிற்கு கிடைத்த அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரைப்போல் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனைத்தான் இந்தியா இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது. 2011 உலகக்கோப்பை போட்டிகளையும் அதற்கடுத்த இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் எடுத்து பார்த்தால் 2011-ல் வென்றதற்கும் அடுத்ததடுத்தவற்றில் தோற்றதற்கும் இருக்கும் வித்தியாசமாய் யுவராஜ் சிங் இருப்பார்.

 

அதிரடி பேட்ஸ்மேனை தாண்டி யுவி ஒரு சிறந்த ஆப்-ஸ்பின்னர். பேட்டிங்கை தாண்டி பந்துகளை சுழற்றுவதின் மூலமே எதிரணிகளை சுக்குநூறாக்கியிருக்கிறார். மொத்தத்தில் அற்புதமான ஆல்ரவுண்டர். பந்து வீசி விக்கெட்களை அள்ளும் திறமை கொண்ட ஒரு பேட்ஸ்மேன் அதற்குப்பிறகு இன்றுவரை இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா யுவி போல் வலுவான நுட்பம் கொண்ட நான்காவது இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் இல்லை என்கிறபோது யுவி விட்டு சென்ற இடம் அணியில் இன்னும் அப்படியே இருக்கிறது. இந்தியாவின் முதல் இருபது ஓவர் சூப்பர்ஸ்டார் என்றால் யுவராஜ் தான். 2007 உலகக்கோப்பையை ஆரம்பித்தபோது அது எப்படி இருக்கும் எப்படி ஆடவேண்டும் என யோசித்து கொண்டிருந்த போது இப்படித்தான் ஆட வேண்டும் என ருத்ர தாண்டவம் ஆடி காட்டியவர் யுவி.

 

yuvi

 

ஸ்டூவர்ட் ப்ராடை புரட்டி எடுத்தது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவோடு அவர் ஆடிய வெறித்தனமான ஆட்டம் அந்த போட்டியில் பிரெட் லீயை லெக் சைடில் ஃப்ளிக் அடிப்பது எல்லாமே இந்திய ரசிகர்களுக்கு எவர்க்ரீன் நினைவுகள். பதினான்கு வயதில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றபோது அவரது தந்தை அந்த பதக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு யுவியை கிரிக்கெட் விளையாட சொல்லியிருக்கிறார். தன் மகனால்தான் இந்தியாவிற்கு உலகக்கோப்பைகள் வரவேண்டும் என்பதை அன்றே கணித்துதான் தூக்கி எறிந்தாரா என தெரியவில்லை. ஆனால் யுவி இந்தியாவிற்கு இரண்டு உலககோப்பைகளை வென்றுதந்தார். இருபது ஓவர் உலகக்கோப்பையில் பேட்டை சுழற்றினார் என்றால் ஒருநாள் உலகக்கோப்பையில் பந்தையும் சேர்த்து சுழற்றி அணியின் ஆணிவேராக நின்றார் யுவி.

 

யுவி மிரளவைக்கும் பில்டரும் கூட. அவரிடம் அடித்துவிட்டு ரன் ஓட எந்த பேட்ஸ்மேனும் யோசிப்பார்கள். பாய்ண்ட் திசையிலிருந்து ஸ்டம்புகளை தெறிக்கவிடுவதை பார்த்து இந்திய ரசிகர்கள் கிறங்கிபோனார்கள். "வாழ்க்கையில் போராடவேண்டும் என நினைப்பவர்களுக்கு யுவி ஒரு சிறந்த முன்னுதாரணம்" என்று சச்சின் புகழ்ந்துள்ளார். அந்தளவிற்கு ஒரு போராட்டக்கர் யுவி. கேன்சர் வந்தவர்கள் முதலில் இழப்பது நம்பிக்கையை. ஆனால் யுவியின் நம்பிக்கை அவரை கேன்சரோடு போராடி வெல்லவைத்தது. திரும்ப அவரால் கிரிக்கெட் ஆட முடியாது என மற்றவர்கள் நினைத்தபோது போராடி களத்தில் வந்து நின்றார். மோசமாக ஆடி அணியிலுருந்து நீக்கப்பட்டபோது அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு போராட்டம். மீண்டும் வந்து நின்றார். இறுதியில் வெளிநாட்டு போட்டிகளில் ஆட அவராகவே ஓய்வை அறிவித்தார். கடைசி வரை அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவுமில்லை. அவரை யாராலும் தோற்கடிக்கவும் முடியவுமில்லை.நெவர் கிவ் அப் என்பதற்கு அர்த்தமாக ஒரு மனிதன் இருக்கவேண்டுமென்றால் அது யுவி தான்.