இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தற்போது மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் மீண்டும் தொடங்கவுள்ள இந்த ஐபிஎல் தொடரில், ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன. www.iplt20.com மற்றும் PlatinumList.net ஆகிய இணைய முகவரிகளில் ரசிகர்கள் தங்களது டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
கடந்த வருட ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.