இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி நாளை (24.02.2021) தொடங்கவுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக, உலகின் மிகப்பெரிய மைதானமான மோட்டேரா மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டி குறித்து, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் அக்கட்டுரையில், உலகத்தின் மிகப்பெரிய மைதானத்தில் விளையாட இருப்பது குறித்தும், நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்த தனது அனுபவம் குறித்தும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட், "உலகிலேயே பெரியதான, மோட்டேராவில் இருக்கும், இந்த புதிய மைதானம், மிகவும் பிடித்த வகையில் உள்ளது என்றுதான் கூற வேண்டும். அது காலியாக இருக்கும்போது கூட அதைச்சுற்றி ஒரு ஒளி வீசுகிறது. புதன்கிழமை 50 சதவீத பார்வையாளர்களுடன், 55,000 மக்களுடன், இந்த மைதானம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை மட்டுமே செய்ய முடியும். மேலும், ஒரு உதாரணத்திற்கு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரோடு ஒரு உலகக் கோப்பை போட்டி இங்கு நடந்தால், நாங்கள் நினைப்பதைக் கூட எங்களால் கேட்க முடியுமா என தெரியவில்லை.
2017-18 ஆஷஸ் தொடரில், மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்திருந்தபோது, அவரின் கேட்சை நான் பிடித்தேன். பிறகுதான் டாம் கரன் நோ-பால் வீசியது தெரிந்தது. அதற்கடுத்த பந்தில் அவர் சதத்தை எட்டியபோது, அங்கு எழுந்த சத்தம் நம்ப முடியாத வகையில் இருந்தது. ஆனால் இந்த மைதானம் அந்தச் சத்தத்தை விஞ்சும் திறனைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். பார்வையாளரின்றி நடைபெற்ற முதல் போட்டியுடன் ஒப்பிடும்போது, கடந்த வாரம் (இரண்டாவது டெஸ்டின் போது) தினசரி 10,000 பேர் கூட ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினர். இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது தற்செயலானது என நினைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.