Skip to main content

Ind Vs Aus: மைதானத்திற்கு மின் விநியோகம் நிறுத்தம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Electricity supply to India vs Australia match stadium in Raipur stopped today

 

சத்தீஷ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. 

 

ஐந்து டி.20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போது வரை மூன்று டி.20 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் இந்தியா இரு போட்டிகளில் வென்றுள்ளது. இறுதியாக நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதன் மூலம், இன்று நடைபெறவிருக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும். மாறாக ஆஸ்திரேலியா இன்று நடக்கும் போட்டியில் வென்றால் இரு அணிகளும் 2க்கு - 2 வெற்றி என இறுதிப் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக மாறும். 

 

இந்நிலையில், இன்று டி.20 போட்டியின் நான்காவது ஆட்டம் சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஆனால், அந்த மைதானத்திற்கு இன்று முதல் மின் விநியோகம் செய்யப்படமாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இது குறித்து மின் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது; ராய்பூர் வீர் நாராயண மைதான நிர்வாகம் ரூ. 3.16 கோடி மின் கட்டணத்தை இன்னும் கட்டாமல் வைத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டே அந்த மைதானத்திற்கு மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், இதனை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கும், மற்ற செலவுகள் விளையாட்டுத் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மின் கட்டணம் தொடர்பாக அணுகும்போதும், பொதுப்பணித்துறையும், விளையாட்டுத்துறையும் ஒருவரை ஒருவர் கைகாட்டுகின்றனர். இருந்தபோதும் இருவருக்கும் முறையாக தெரியப்படுத்தியும் மின் கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், கடந்த 2009ம் ஆண்டே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேசமயம், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதும் தற்காலிக மின் இணைப்பு மூலம் மின்சார வசதி பெற்று வந்தது. ஆனால் தற்போது அதுவும் தடையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முக்கிய போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்