இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும் ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.
அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.