உலகக்கோப்பை தொடர் நடைபெற இன்னும் 12 மாதங்களே இருக்கின்றன. 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்திய அணி 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது கோப்பையை வென்ற அணியை வழிநடத்திய தோனி, வருகிற 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் களமிறங்க இருக்கிறார். 2011ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்த மூத்த வீரர்களில் இப்போது தோனி மட்டுமே நீடிக்கிறார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், ‘ 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைதான் எனக்கு முதல் மிகப்பெரிய தொடர். அதில் சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் அணில் கும்ளே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். தற்போதுள்ள இந்திய அணியில் மிகச்சிறந்த அனுபவமுள்ள மூத்த வீரர் தோனி இருக்கிறார். அவரை இளம்வீரர்கள் அணுகி உலகக்கோப்பைக்கு தயாராவது குறித்து ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனி தன்னிலை உணரவேண்டும். அவரது நிதானம் கோட்டை போன்ற இலக்கை எட்டுவதற்கு தடையாக உள்ளது என சேவாக் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.