இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ஒருகாலத்தில் இருந்தவர் பர்தீவ் பட்டேல். ஆனால், நீண்டகாலத்திற்கு அவரால் அந்த இடத்தில் நீடிக்க முடியவில்லை. அதன்பிறகு, ஐ.பி.எல். சீசன்களில் மட்டுமே அவரை அணியில் பார்க்க முடிந்தது. நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் அவர் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இந்நிலையில், ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதேபோல், அணியின் தன்னால் நீடிக்க முடியாததற்கான காரணம் என்னவென்றும் அவர் கூறியிருக்கிறார்.
குறிப்பாக தோனி குறித்து பேசிய பர்தீவ் பட்டேல், ‘தோனிக்கு முன்பாகவே நாங்கள் கிரிக்கெட் விளையாடி, பயிற்சி பெற்றிருந்தோம். ஆனால், எங்களது முழுமையான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒருவேளை அது சரியாக நடந்திருந்தால், தோனிக்கு இந்த இடம் கிடைத்திருக்காது. நான், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் தோனிக்கு அணியில் நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அதேசமயம், தோனி மிகச்சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் தோனி அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. நாங்கள் இல்லையென்றால் தோனியே கிடையாது’ என கலகலப்பாக பேசியுள்ளார்.