இனி ஃபார்முக்கே திரும்ப மாட்டார் என்ற விமர்சனங்களைப் பொய்யாக்கும் விதமாக, ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணியில் அதிரடியாக விளையாடி தன்மீதான நம்பிக்கையை மீண்டும் வளர்த்தெடுத்தவர் தோனி. தற்போது நடந்துமுடிந்த இங்கிலாந்து தொடரில் அவர்மீது மறுபடியும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், அத்தியாவசியமான தருணத்தில் ஆமை வேகத்தில் விளையாடி 59 பந்துகளுக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், அடுத்த போட்டியில் 66 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுக்க, களத்தில் தோனி நேரத்தை அதிகம் வீணடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த வரிசையில் இடம்பிடித்துவிட, தற்போது அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய அவர், ‘இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மென்களான ரோகித், தவான், கோலி மற்றும் தோனி ஆகியோர் சரியான நேரத்தில் ரன்குவிப்பில் ஈடுபடவில்லை. அவர்களது கடந்தகால பங்களிப்போடு ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. அதேபோல், இந்திய அணியின் பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். 4 மற்றும் 5-ஆம் இடங்களில் யாரை இறக்குவது என்ற குழப்பத்திற்கு இன்னமும் விடை கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறது இந்திய அணி’ என்றார்.
மேலும் தோனி குறித்து பேசுகையில், ‘தோனி பழைய தோனியாக இப்போது இருக்கவில்லை. அவர் இளைஞர் கிடையாது. அவருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில், தோனி பொறுப்பேற்று அணியை கடைசிவரை கூட்டிச் சென்றிருக்கவேண்டும். டாட் பந்துகளை ரன்களாக மாற்றியிருக்கவேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.