சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, பின்வரிசையில் களமிறங்கியது ஏன் என தோனி விளக்கம் அளித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரின் நான்காவது நாளான நேற்று, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அதிரடியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெற்றிவாய்ப்பை அருகில் நெருங்கி வந்து தவறவிட்டதால், சென்னை அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இப்போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. சென்னை அணியின் மோசமான பந்துவீச்சு மற்றும் தோனி முன்கூட்டியே களமிறங்காதது எனப் பல்வேறு காரணங்கள் சென்னை அணியின் தோல்விக்கு காரணங்களாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்வரிசையில் களமிறங்கியது ஏன் எனத் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "நீண்ட நாட்களாக நான் பேட்டிங் செய்யவில்லை. புதுவகையில் முயற்சிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். சாம் கரனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. புதுமுயற்சி சரியாக இல்லையென்றால் மீண்டும் திருத்திக்கொள்ளலாம். டு பிளஸிஸ் சூழலுக்கு ஏற்ப சரியாக பொருந்திக்கொண்டார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். 200 ரன்களுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் போட்டி சிறப்பாக அமைந்திருக்கும்" எனக் கூறினார்.