ஸ்மித் தடையில் இருக்கும்போது அவரை அவமானப் படுத்தும் விதமாக செய்தி வெளியிடுவது நியாயமாகாது என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் ஷமி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இவர் நியூயார்க் நகரில் உள்ள மதுவிடுதியில் தனிமையில் அமர்ந்து பீர் அருந்தும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட, கேவலமான ஸ்மித் என்றும் பரப்புரை செய்தன.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பேசியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் ஷமி, விளையாட்டு வீரர்களாக நாங்கள் சரியான விஷயங்களை செய்ய நினைக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இருக்க விரும்புகிறோம். ஆனாலும் சில தவறுகள் நடந்துவிடுகின்றன. அதற்கான தண்டனையில் இருக்கும்போது எங்களைக் கேவலப்படுத்துவது போல நடந்து கொள்ளாதீர்கள். அது மனிதத்தன்மைக்கு அழகல்ல. தவறுகளுக்கு தண்டனை தருவதைப் போல, மன்னிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு என ஸ்மித்துக்கு ஆதரவளித்துள்ளார். ஸ்மித் கனடாவில் நடக்கும் குளோபல் டி20 போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.