Skip to main content

உலகக் கோப்பை கிரிக்கெட்; இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்!

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 Cricket World Cup; Indian team jersey introduction!

 

‘உலகக் கோப்பை கிரிக்கெட் 2023’ இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை ஜெர்சியில் சில மாற்றங்கள் செய்துள்ளது.

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. 

 

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இந்தியாவின் முதல் போட்டி, சென்னை, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடக்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, உலகக் கோப்பை அணிகள் தங்கள் நாட்டின் பிரத்யேக ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியினை அடிடாஸ் நிறுவனம் ட்விட்டரில் பிரத்யேகப் பாடலுடன் வெளியிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், "1983ம் ஆண்டு தீப்பொறியைப் பற்ற வைத்தது. 2011ம் ஆண்டு பெருமையைக் கொண்டு வந்தது. 2023ம் ஆண்டு கனவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" எனப் பதிவிட்டிருந்தது. அந்த பாடல் வீடியோவின் இறுதியில், "மூன்றாவது கோப்பை கனவை நிறைவேற்றும் முயற்சியை இந்தியா நிறுத்தாது. மேலும் முயற்சியை நிறுத்தாதவர்களுக்கு முடியாதது எதுவுமில்லை" என நம்பிக்கை அளிக்கும் வரிகளில் பாடல் முடிந்தது.

 

மேலும், ஜெர்சியின் டிசைன் குறித்துப் பார்த்தால், வழக்கமான நீல நிற உடையின் தோள்பட்டையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் கோடுகளைப் பதித்துள்ளனர். இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை நடத்துவதால் மூவர்ணக் கொடியை வைத்து கவுரவப் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது, ஆடையில் பாரத் என இல்லாமல் இந்தியா என்றே இருந்தது தான். ஏனென்றால், சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாரத் என மாற்றச் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

 

வருகிற உலகக் கோப்பைக்கான ஜெர்சியை பாகிஸ்தான் அணி தான் முதலில் ஆகஸ்ட் 28 அன்று அறிவித்தது. பின்னர், நியூஸிலாந்து அணி செப்டம்பர் 17ம் தேதி வெளியிட்டது. தற்போது, இந்திய அணி தனது அதிகாரப்பூர்வ உடையை இன்று (20-09-2023) அறிவித்துள்ளது. மற்ற அணிகளான இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து தங்களின் ஜெர்சியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னதாக இன்று, ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ 'தில் ஜாஷ்ன் போலே (இதயம் கொண்டாடுகிறது)' எனப் பெயரிட்ட பாடலை வெளியிட்டது. அதில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இடம் பெற்றிருந்தார். பாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்திருந்தார். இந்த கீதத்தில் இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவியான நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மாவும் இடம்பெற்றுள்ளார். மூன்று நிமிடம் 22 வினாடிகள் நீளமுள்ள இந்த பாடல், 'ஒரு நாள் எக்ஸ்பிரஸ் ரயிலில்' இந்தியா வழியாகப் பயணம் செய்வது போல காட்சி அமைத்திருந்தனர்.

 


 

 

Next Story

IND vs ZIM : 4 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்திய இந்தியா! 

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
IND vs ZIM: India won the series 4 - 1

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (14.07.2024) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஜிம்பாப்வே அணியின் சார்பில் முதல் ஓவரை கேப்டன் சிக்கந்தர் ராஷா வீசினார். 

IND vs ZIM: India won the series 4 - 1

இந்த பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து அசத்தினார். இருப்பினும் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டாக வீசப்பட்ட முதல் பந்தை மறுபடியும் எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே 12 ரன்களை அடித்த முதல் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்தார்.

இதனையடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தர் வென்றார். 

Next Story

IND vs ZIM : டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
IND vs ZIM India won the T20 series and won it

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) நடைபெற்றது. இதில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது. 

IND vs ZIM India won the T20 series and won it

இத்தகைய சூழலில் தான் இந்தத் தொடரின் 4வது போட்டி இன்று (13.07.2024) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் இறுதி வரை விக்கெட்டையே பறிகொடுக்காமல் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அசத்தினர். இறுதியாக 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.