Skip to main content

நடப்பு ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்கள்; பட்டியல் வெளியீடு

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Commentators of the current IPL series; Publication of list

 

ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் மார்ச் 31 இல் துவங்கி மே 21 ஆம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கப்பட்டு, அவை சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

 

ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும், மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்கின்றன.

 

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரை ஓடிடி தளத்தில் ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. 

 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பங்குபெறப் போவோர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆங்கில வர்ணனையாளர்களாக கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், இயான் மோர்கன், பிரட் லீ, கிரேம் ஸ்வான், கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன், சுப்ரியா சிங், சுஹைல் சந்தோக் ஆகியோர் செயல்பட உள்ளனர். 

 

ஹிந்தியில் ஓவைஸ் ஷா, ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, சபா கரீம், அனந்த் தியாகி, ரிதிமா பதக், சுர்பி வைத், க்ளென் சுல்தானா ஆகியோர் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர். 

 

தமிழில் அபினவ் முகுந்த், ஆர்.ஸ்ரீதர், வித்யுத் சிவராமகிருஷ்ணன், பாபா அப்ரஜித், பாபா இந்திரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், கே.பி.அருண் கார்த்திக், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், சஞ்சய் பால், ஸ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன், சமீனா அன்வர், காயத்ரி சுரேஷ் ஆகியோர் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர். அதேபோல் பிற மொழி வர்ணனையாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தோனிக்கு அறுவை சிகிச்சை?

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Dhoni surgery? for knee injury

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி முதல் நாளில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இந்த வெற்றியுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். 

 

தனது இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட தோனி குஜராத் உடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்டது. இது குறித்து அப்போது பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளம்மிங், “தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அசைவுகளில் அதை நீங்கள் கணலாம். அது அவருக்கு சிறு தடையாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். அதில் சந்தேகம் இல்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழி நடத்துவார்” என்றார். இதன் பின்பே சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். சென்னை அணியின் முதல் போட்டியில் தோனி கலந்து கொண்டார். அப்போட்டியில் தோற்றாலும் தோனி விளையாடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

 

காலில் காயத்துடனே அனைத்து லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனாலும் இந்த சீசன் முழுவதும் தோனி ரன்களை எடுப்பதற்கு சிரமப்பட்டதை காண முடிந்தது. தன்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என வீரர்களிடம் சொல்லி இருப்பதாக தோனி ஒரு லீக் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார். லீக் போட்டி ஒன்று முடிந்த பின் தோனி காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதும், சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்த பின் ரசிகர்களுக்கு நன்றி செலுத்த மைதானத்தை சுற்று வந்த போதும் காலில் முழங்கால் கேப் உடனே வலம் வந்தார். இத்தகைய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது. 

 

இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபெண் மருத்துவமனையில் சில சோதனைகளுக்காக தோனி அனுமதிக்கப்பட இருக்கிறார் என்றும் முழங்கால் காயத்திற்கு முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் அவர் வீடு திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டால் முழுமையான சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.