Skip to main content

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மூவருக்கு கரோனா!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

csk

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. அதேவேளையில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, அவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெளியே எங்கும் செல்ல ஐபிஎல்லில் விளையாடும் வீரர்களுக்கு அனுமதியில்லை.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருந்தன. ஆனால் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி, வேறு ஒருநாளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

இந்தநிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியினர் மூவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும், பேருந்து கிளீனர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ (espn cricinfo) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.