Skip to main content

இந்திய அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு?

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 A chance for a Tamil Nadu player in the Indian team?

 

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் தமிழக வீரருக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் இந்த ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் விளையாடிக் கொண்டிருந்தார் அக்சர் படேல். பின்னர், கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் அக்சருக்கு தொடைப் பகுதியில் சில உள் காயங்கள் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால், காயத்திற்கான சிகிச்சை பற்றிய எந்த தகவலும் தற்போது வரை பிசிசிஐ சார்பில் வெளியிடப்படவில்லை. அக்சர் படேலின் இந்த வெளியேற்றம் இந்தியா அடுத்த மாதம் எதிர்கொள்ளவுள்ள உலகக் கோப்பையை பாதிக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

 

நாளை (17-09-2023), இந்தியா-இலங்கை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும். எனவே, இந்த இறுதிப் போட்டியில் அக்சர் படேல் விளையாட முடியாத சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அக்சரின் காயம் குறித்து பிசிசிஐ கூறுகையில், "அக்சர் தற்போது பல காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 'டீப்பாக' பந்து வீசியதால் அவரின் முன்கையிலும் காயம் இருக்கிறது. இதில், மிக முக்கியமாக தொடையில் தசைப்பிடிப்பும் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

 

அவருக்குப் பதிலாகத் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளிவந்தன. மேலும் பிசிசிஐ, வாஷிங்டன் சுந்தரை தொலைப்பேசியில் அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சுந்தர் சேர்க்கப்பட்டாலும் ப்ளேயிங் 11ல் இடம் பெறுவாரா என்பது சந்தேகம் தான்.

 

23 வயதான சுந்தர், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5.05 என்ற எகானமி ரேட்டில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதனுடன் ஒரு அரை சதத்தை சேர்த்து 233 ரன்கள் குவித்துள்ளார். ஒருவேளை ஆட்டத்தில் இக்கட்டான சூழல் ஏற்பட்டால் அவர் நம்பர் 8இல் பேட் செய்து உதவுவார். அக்சர் படேல் காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்றால் உலகக் கோப்பை அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், "உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழர் கூட இல்லை" என வருந்தினார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.