இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவந்தது. ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில், இருபது ஓவர் தொடரை இலங்கை வென்றது. இதற்கிடையே, இரண்டாவது இருபது ஓவர் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து க்ருனால் பாண்டியாவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில், க்ருனால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கும், கிருஷ்ணப்பா கௌதமிற்கும் கரோனா உறுதியாகியுள்ளது. இதற்கிடையே இலங்கைக்குச் சென்ற இந்திய அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளதாகவும், கரோனா பாதிக்கப்பட்ட மூன்று வீரர்களும், க்ருனால் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மற்றவர்களும் இலங்கையிலேயே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டிலுள்ள கரோனா விதிமுறைப்படி, கரோனா உறுதியானவர்கள் 10 நாட்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 7 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு கரோனா சோதனை நடத்தப்படும். அதில் கரோனா இல்லை என்பது உறுதியானால் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.