Skip to main content

ஆர்ஆர் vs சிஎஸ்கே: யானை பலம் கொண்ட ராஜஸ்தானை சமாளிக்குமா சென்னை? - முழு அலசல்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Can RR CSK deal with the mighty Rajasthan in Chennai? Full analysis

 

16 ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளும் எதிரணியை வீழ்த்த வியூகங்கள் வகுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  17 ஆவது லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்கும் 200 ஆவது போட்டியாகும்.

 

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு ஏற்ற மைதானம் என்பதால் இன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சென்னையில் மொயின் அலி, ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விக்கெட் வேட்டை நிகழ்த்துபவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களாகவே உள்ளனர். சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதில் மொயின் அலி, ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோரது பந்துவீச்சு எகானமி 6.50ல் இருந்து 6.75ற்கு உள்ளாகவே உள்ளது. எனவே இன்றைய போட்டியில் சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் 10 முதல் 12 ஓவர்கள் வரை வீசக்கூடும். ராஜஸ்தான் அணியிலும் ஜாம்பவான் அஷ்வின், சாஹல் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அஷ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால் சென்னை அணி பேட்ஸ்மேனுக்கு தொல்லை கொடுப்பார் என்பதில் ஐயம் இல்லை. அதேபோல் சாஹலும் அதிக விக்கெட்களை கைப்பற்றும் திறன்மிக்கவர் என்பதால் இன்றைய போட்டியிலும் சாதிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

 

இது ஒருபக்கம் இருந்தாலும் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ராஜஸ்தான் அணியை ஒப்பிடுகையில் சென்னை அணி பலவீனமாகவே உள்ளது. தொடக்க ஓவர்களிலேயே விக்கெட் வேட்டை நிகழ்த்தும் போல்ட்,  ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மிகுந்த பக்கபலமாக உள்ளனர். சுழல் மற்றும் வேகம்  இணைந்து சென்னை அணியின் முதல் 2 முதல் 3 விக்கெட்களை வீழ்த்தினால் சென்னை அணியால் பெரிதான ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியாமல் சென்றுவிடும். ஏனெனில் ராஜஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் இமாலய இலக்குகளைக் கொண்டே விளையாடியுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 203 குவித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியபோது அந்த அணி நிர்ணயித்த 198 ரன்களில் 5 ரன் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்தது. பின் டெல்லி அணிக்கு எதிராகவும் 199 ரன்களைக் குவித்திருந்தது.

 

மாறாக சென்னை அணி வேகப்பந்து வீச்சில் அதிக அனுபவம் இல்லாத இளம் வீரர்களை நம்பியே உள்ளது.  இந்நிலையில் சென்னை அணி மூச்சுவிடும் வண்ணம் இலங்கை வீரர்கள் மஹீஸ் தீக்‌ஷனாவும் பதிரானவும் சென்னை அணியோடு இணைந்துள்ளனர். சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் இன்றைய போட்டியில் தீக்‌ஷனா விளையாடலாம் எனத் தெரிகிறது. சென்னை அணியின் பேட்டிங்கில் கெய்க்வாட் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக களமிறங்கும் கான்வே நடப்பாண்டில் பெரிதாக ரன் வேட்டை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கான்வே சுழலுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் வேகப்பந்து வீச்சிலும் ஸ்விங் ஆகும் பந்தை அடித்து ஆடவும் சிரமப்படுகிறார். கடந்த போட்டியில் அசத்திய ரஹானே இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் சென்னை அணிக்கு பெரிய பலமாக இருக்கும். அணிக்கு 4 வெளிநாட்டு வீரர்களே இருக்க வேண்டும் என்பதால் ஸ்டோக்ஸ் இல்லாதது அணியை பாதிக்காத வண்ணமே உள்ளது. ஏனெனில் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆடும் கான்வே, சுழலில் அசத்தும் மொயின் அலி, சாண்ட்னர், தீக்‌ஷனா ஆகியோர் தயாராக இருக்கும் நிலையில் சென்னை அணிக்கு ஸ்டோக்ஸ் இல்லாதது பெரிதான இழப்பை ஏற்படுத்தாது. 

 

அதேபோல் ஸ்டோக்ஸ் அணியில் இருக்கும் பட்சத்தில் அவர் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு, கான்வே 3 அல்லது 4 ஆவது விக்கெட்டாக களமிறக்கப்பட்டால் சுழலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை கான்வேயும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை ஸ்டோக்ஸும் வெளிப்படுத்தலாம். ராஜஸ்தான் அணியில் பட்லர், ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். பின்வரும் சாம்சன், ரியான் பராங், ஹெட்மயர், ஜூரல் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு பெரிதும் பலம் சேர்க்கின்றனர். சென்னை ராஜஸ்தான் அணிகளை ஒப்பிடுகையில் பேட்டிங்கில் இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி பலமடங்கு மேலாக உள்ளது. அதையும் மீறி சென்னை அணி இன்று வெற்றி பெற்றால் சேப்பாக்கம் அதிரும் என்பதில் சந்தேகம் இல்லை.