இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி, 391 குவித்தது. இதன்பிறகு 27 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் பொறுமையாக ஆடிய ரஹானே 61 ரன்களும், மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவும் விரைவில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பந்த், இஷாந்த் ஷர்மா ஆகியோர் களத்தில் இருக்கும்போது நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷாந்த் ஷர்மாவும், பந்தும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய மொஹம்மது ஷமி - பும்ரா இருவரும் பேட்டை சுழற்றி ரன்களை சேர்க்க ஆரம்பித்ததோடு, டெஸ்ட்டில் தங்களது அதிகபட்ச ரன்களையும் எட்டினர். இதில் ஷமி சிக்ஸரோடு அரை சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் இந்தியா 271 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. இதுமட்டுமின்றி பும்ரா - ஷமி ஜோடி 39 கால சாதனையை ஒன்றையும் முறியடித்துள்ளது. 1982 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில், கபில்தேவ் - மதன்லால் இணை 66 ரன்கள் அடித்ததே இங்கிலாந்து மண்ணில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு குவித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. தற்போது பும்ரா -ஷமி இணை 89 ரன்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.