8 ஆவது உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு தேர்வாகும். முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வான நிலையில் இரண்டாம் பிரிவில் அரையிறுதிக்கு செல்ல தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் இன்று காலை தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.
159 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய படியே ரன்களை சேர்த்தனர். நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்து வீச தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிப்பதற்கு மிகவும் திணறினர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஆட்டநாயகனாக நெதர்லாந்து அணியின் ஆக்கர்மேன் தேர்வு செய்யப்பட்டார். 21 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஆக்கர்மேன் 3 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க அணி தோற்றதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் பங்களாதேஷ் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களே அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.