16 ஆவது ஐபிஎல் சீசனின் 56 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியில் சாஹல் 4 விக்கெட்களையும் போல்ட் 2 விக்கெட்களையும் சந்தீப் சர்மா, ஆசிப் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 150 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 98 ரன்களையும் சாம்சன் 48 ரன்களையும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி, பவர்ப்ளேவில் அதிக விக்கெட்கள் இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 25 விக்கெட்களை இழந்துள்ளது. சாஹல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை அவர் 184 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் ப்ராவோ 183 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இதுவரை கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாக இருந்தது.