Skip to main content

விருதை வெல்வதில் இந்தியர்கள் ஆதிக்கம்; மூன்றாவது மாதமாக இந்தியரை தேர்வு செய்த ஐ.சி.சி!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

bhuvaneswar kumar

 

சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒரு ஆண்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பாராட்டும் வகையில், மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ஜனவரி மாதத்திலிருந்து வழங்கி வருகிறது. 

 

ஜனவரி மாதத்திற்கான விருதை இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் வென்றார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றக் காரணமாய் விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான விருதை அஸ்வின் கைப்பற்றினர். இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இந்த விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. 

 

இந்தநிலையில், மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதிற்கு இந்திய வீரர் புவனேஸ்வர் குமாரை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. புவனேஸ்வர் குமார், இங்கிலாந்திற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும், ஐந்து இருபது ஓவர் போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 4.65 என்ற எக்கனாமியுடன் பந்து வீசியுள்ள அவர், இருபது ஓவர் போட்டிகளில் 6.38 எக்கனாமியில் பந்து வீசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

"நவீன் பட்நாயக்குடன் அரசியல் பேசும் தேவை இல்லை" - நிதிஷ் குமார்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

nitish kumar naveen patnaik meeting odisha bhubaneswar 

 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணியை ஏற்படுத்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், நிதிஷ் குமார் எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி என பல்வேறு தலைவர்களை தொடர்ந்து சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசி வருகிறார்.

 

இதன் ஒரு பகுதியாக நிதிஷ்குமார் நேற்று (09.05.2023) ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றார். அப்போது அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார்.

 

இந்த சந்திப்புக்கு பிறகு நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நிதிஷ் குமாருக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. நாங்கள் இருவரும் வாஜ்பாய் அரசில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். நிதிஷ் குமாரை இப்போது சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். பூரியில் உள்ள நிலம் பற்றி விவாதித்தோம். பீகார் மக்களும் பக்தர்களும் இங்கு வந்து பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபட ஏதுவாக பீகார் பவன் கட்டுவதற்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்" என்று தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் பேசுகையில், "ஒடிசா மாநிலத்திற்கு நான் அடிக்கடி வந்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கால் தான் இங்கு வர முடியவில்லை. இப்போது நாங்கள் இருவரும் அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நவீன் பட்நாயக்குடன் நட்பு வலுவாக உள்ளது. நவீன் பட்நாயக்குடன் அரசியல் பேசும் தேவை இல்லை" எனத் தெரிவித்தார்.

 

அப்போது செய்தியாளர்கள், "நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி பேசி முடிவு எடுக்க டெல்லியில் நடக்க உள்ள கூட்டத்திற்கு நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்தீர்களா" என நிதிஷ் குமாரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இவர்களின் இந்த சந்திப்பானது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.